• Tue. Apr 30th, 2024

ஓட்டல் உரிமையாளரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநில கும்பல்..!

Byவிஷா

Jul 3, 2022

கோவையில் மேம்பால பணிக்காக, குழ தோண்டிய போது தங்கப்புதையல் கிடைத்ததாகக் கூறி, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; ஓட்டல் உரிமையாளரிடம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு(45). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இவரது உணவு விடுதிக்கு வட மாநிலத்தை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளரிடம் தாங்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதில் ஒரு நபர், நாங்கள் கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருகிறோம். அப்போது ஒரு நாள் குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். அப்போது ஒரு குடுவையில் தங்க கட்டிகள் இருந்ததாகவும், அதனை குறைந்த விலையில் விற்க உள்ளதாக கூறியுள்ளனர்.


மேலும் ஒரு தங்க கட்டியை காட்டி ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் கோவை காந்திபுரம் பகுதிக்கு வந்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை வெறும் ரூ.5 லட்சத்திற்கு தருவதாக கூறியுள்ளனர். வட மாநில நபர்களின் பேச்சில் மயங்கிய பாலு இதனை உண்மை என நம்பியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி பணத்துடன் பாலு காரில் கோவை சென்றுள்ளார். காந்திபுரத்தில் வைத்து அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் குறிப்பிட்ட சாலையில் தங்க கட்டிகளோடு நிற்பதாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரிடம் 5 லட்சம் ரூபாயை கொடுத்து தங்க கட்டிகளை ஓட்டல் உரிமையாளர் பாலு பெற்றுள்ளார்.
5 லட்சம் ரூபாய்க்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் கிடைத்துள்ளதே என கனவில் மிதந்துள்ளார் பாலு, இதனையடுத்து அந்த தங்க கட்டிகளை நகைகள் சோதனை செய்யும் இடத்தில் கொடுத்து சோதித்துள்ளார். அப்போது அந்த தங்க கட்டிகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியானது என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பாலு இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி தங்க கட்டி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வட மாநில கும்பல்களின் தொடர் மோசடிகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பணத்தின் மீதுள்ள ஆசை காரணமாக பொதுமக்கள் ஏமாறும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *