• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோயம்பேடு இல்லை… கிளாம்பாக்கம் வாங்க…

Byகாயத்ரி

Jul 2, 2022

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெருக்கடியை குறைக்க வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் 2021-ம் ஆண்டே திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணிகளை தாமதமானது.

இந்த நிலையில், இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிருந்து தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, சேலம் உள்ளிட்டவற்றுக்கு பேருந்துகள் இயக்கப்படும். அதுமட்டுமின்றி, விமான நிலையம் வரை செல்லும் ப்ளூ லைன் மெட்ரோ ரயில் வசதி கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதனால், பயணிகள் விரைவாக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல முடியும்.

சென்னையின் முக்கிய அடையாளமாக திகழும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை பேருந்து வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேருந்து நிலையங்களும் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 150 பேருந்துகள் வரை இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படவுள்ளன. குறிப்பாக தாம்பரம் மேற்கு மற்றும் தாம்பரம் கிழக்கு பேருந்து நிலையங்கள் வரை செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிக்கப்படும்.

எனவே, வரும் செப்டம்பரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெருக்கடி குறையும். புது அடையாளமாக கிளாம்பாக்கம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.