• Sat. Apr 27th, 2024

இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ?

இலங்கை நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என பிரதான எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தீவு நாடான இலங்கை அதில் இருந்து மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. விலைவாசிகள் அனைத்தும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை மற்றும் உணவு பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.

மக்களின் கோபபார்வை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திரும்பி உள்ளது. மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க புதிய அமைச்சர்கள் பதவியேற்றபோதும், அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். 3 முறை நாடாளுமன்றம் கூடியும் உறுதியான தீர்வுகள் எட்டப்படவில்லை.அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளையும் முற்றுகையிட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நுவரெலியா மாவட்டம் வலப்பனையில் ஏராளமான பொது மக்கள் ஒன்று திரண்டு, அதிபர் பதவி விலக கோரி போராட்டம் நடத்தினர்.

தலைநகர் கொழும்புவில் தேசிய மருத்துவ சங்க உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருந்து மாத்திரைகளின் தட்டுப்பாட்டால் அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியவில்லை என்றும் இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர்.நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து, உலகின் மிக மோசமாக செயல்படும் நாணயமாக மாறியுள்ளதுஇதனை சரிக்கட்டும் விதமாக கடந்த புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் இலங்கை மதிப்பில் 119 புள்ளி 08 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டு உள்ளது. இந்திய ரூபாய்க்கு அதன் நிகர மதிப்பு இரண்டாயிரத்து 850 கோடி ரூபாய் ஆகும். ஆனால், இந்த தொகையை அச்சிடும் போது, நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகிய பதவிகள் காலியாக இருந்தன.

கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப பணத்தை அச்சடிக்கும் நடைமுறை உள்ள நிலையில், எந்தவித கட்டுப்பாடும் இன்றி இலங்கை பணத்தை அச்சடித்துள்ளது. தற்போதைய சூழலை சமாளிக்க குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தினருக்கு, இரண்டு மாதங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசின் இந்த நடவடிக்கை மூலம், நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்பதே துறைசார் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *