• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் நூதனமாய் மனுதாக்கல் செய்த ஏர்கிராஃப்ட் இன்ஜினியர்!

Byகுமார்

Feb 2, 2022

விமானப் பொறியியல் நுட்பம் பயின்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிக நூதனமான முறையில் எலிப்பொறியுடன் வந்து மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மதுரை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி 3ஆவது வார்டு ஆனையூர் பகுதியில் சுயேட்சையாக போட்டியிட, ஏர்கிராஃப்ட் இன்ஜினியர் பணியை உதறிவிட்டு ஜாஃபர் ஷெரீப் என்ற இளைஞர் இன்று கையில் எலிப்பொறியுடன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுடன் மனுதாக்கல் செய்தார்.

இதுகுறித்து இளைஞர் ஜாஃபர் கூறுகையில், ‘நான் இந்த மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட முக்கியக் காரணம் என்னவென்றால், படித்தவர்கள் வாக்களிக்க வருவதை உறுதி செய்யத்தான். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து மனுதாக்கல் செய்துள்ளேன்.

தேர்தல் நாளன்று கிடைக்கும் விடுமுறையை படம் பார்ப்பதற்கும், சமூக வலைதளங்களில் பொழுதுபோக்குவதற்கும்தான் பயன்படுத்துகின்றனர். ஜப்பானாக மாற்றுவேன், சிங்கப்பூராக மாற்றுவேன் என்பதிலெல்லாம் எனக்கு துளியும் நம்பிக்கையில்லை. மாதிரி தூய்மை வார்டாக மாற்ற வேண்டும் என்பதுதான் இலட்சியம். பிற அனைத்து வார்டுகளுக்கும் என்னுடைய வார்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

நான் கையில் கொண்டு வந்துள்ள எலிப்பொறியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை மாட்டியுள்ளேன். இதே போன்று பணத்துக்காக ஆசைப்பட்டு, பொறியில் சிக்கிய எலியைப் போன்று ஆகாமல், வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். என்னைப் போன்று பட்டதாரி இளைஞர்களின் சார்பாக இதனை நான் இங்கே பதிவு செய்கிறேன்.

ஒட்டுக்குப் பணம் என்ற எலிப்பொறியில் நீங்கள் மாட்டீர்களேயானால், அடுத்த 10 ஆண்டுகள் ஆனாலும் வாக்காளர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. எனக்கென்று வேலை உள்ளது. என்னுடைய வார்டை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம். அதற்காகவே இந்தத் தேர்தலில் நான் நிற்கிறேன்’ என்றார்.