• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி- இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது நியூசிலாந்து!

ByP.Kavitha Kumar

Mar 6, 2025

அரையிறுதிப்போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து நுழைந்தது.

பாகிஸ்தான் மற்றும் துபாயில் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்த தென்னாப்ப்ரிக்கா, ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை சந்தித்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். நியூஸிலாந்து அணி 43ரன்கள் எடுத்த நிலையில் வில் யங் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ரச்சினும், கேன் வில்லியம்சனும் இணைந்து தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்தனர். ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்ஸன் 102 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் வந்த வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் மூலம் 50ஓவர்களின் முடிவில் 6விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 362 ரன்களைக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தென்னாப்ரிக்கா அணி 363 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா 56 ரன்கள், ரஸ்ஸி வான் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். கடைசி வரை களத்தில் நின்று போராடிய டேவிட் மில்லர் சதம் அடித்தார். இருப்பினும் தென்னாப்ரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 312 ரன்கள் அடித்து நியூஸிலாந்து அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதில் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தென்னாப்பிரிக்காவின் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தியது அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி வருகிற ஞாயிறன்று (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.