புத்தாண்டுக்கு அதிகளவு மது விற்பனை செய்ய வேன்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டான 2022 நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் கல்லா கட்டும். இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள 5300 டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு மதுபானங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான பிராண்ட்களிலும் மதுபானங்கள் டாஸ்மாக்கில் குவிக்கப்பட்டுள்ளன. ரம், விஸ்கி, பிராந்தி மற்றும் பீர் போன்ற மதுபானங்கள் குடோன்களில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்தாண்டு கொரோன பரவல் காரணமாக பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பார்கள் திறக்கப்பட்டதோடு டாஸ்மாக் கடைகளும் வழக்கம் போல் செயல்படுவதால் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவு மது விற்பனையாகும் என டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இன்று மாலை முதலே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வைக்குப்படி ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு அதிகளவு மது விற்பனை செய்ய வேன்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.