• Fri. Dec 13th, 2024

முதல்வர் வருகைக்காக கோவையில் புதிய ரோடு

BySeenu

Nov 4, 2024

முதலமைச்சரின் வருகைக்காக கோவையில் ரோடு போடுகிறார்கள் என்றால் அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டியில் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்குடையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்..,

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிகமான நிதி அங்கன் வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் நிலையில், நிலம் முழுவதும் காலி செய்யப்பட்டு வழங்கப்படவில்லை என்றும், இதனால் பணிகளை தொடங்குவதில் மத்திய அரசுக்கு சுணக்கம் இருப்பதாய் தகவல் வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே நிலம் முழுவதும் முழுமையாக காலி செய்யப்பட்டு ஒப்படைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை வரவிருக்கும் முதல்வரிடம் கேட்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை மாநில அரசு உடனடியாக விரைந்து அனுப்ப வேண்டும் என முதல்வரிடம் கேட்க இருப்பதாகவும் கூறினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய் மீது வைத்துள்ள விமர்சனம் குறித்து, இன்னொரு தலைவர் விமர்சனத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம் என்றும் உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல என்றும் கூறினார்.

கடந்த முறை கோவை வந்த முதல்வரிடம் கோவையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்திருந்ததாகவும் அதில் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இன்னும் புதிய கோரிக்கைகள் இருப்பதாகவும் முதல்வரிடம் நேரில் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு விஜயின் எதிர்ப்பு குறித்து, ஒரே நாடு ஒரே தேர்தலில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை அரசியல் கட்சி யோசிக்க வேண்டும் என்று கூறிய அவர், வெறுமனே அனைவரும் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்க கூடாது என்றார்.

கோயம்புத்தூரில் சாலைகள் சரியாக இல்லை என்று கூறிய அவர், முதலமைச்சரின் வருகைக்காக கோயம்புத்தூரில் ரோடு போடுகிறார்கள் என்றால் அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் கூறினார்.

பிராமண சமுதாயத்திற்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றும் தங்கள் சமுதாயம் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது PCR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிராமணர்களின் கோரிக்கை நியாயமானது என்றும் கூறினார்.

அமரன் திரைப்படம் குறித்து, தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தேசப்பற்றும் மிக்க திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது என்று கூறிய அவர், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இந்த படத்தை கமலஹாசன் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி என்றும் அமரன் திரைப்படத்தை பள்ளி கல்லூரி, மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என தெரிவித்தார்.