• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் ரூ.114.48 கோடியில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் மார்ச் மாதம் 2020-ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது. மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் அதே ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர், 2020 டிசம்பர் 28-ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியராக லலிதா நியமனம் செய்யப்பட்டார். தற்போது மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகம் தற்காலிக ஆட்சியர் அலுவலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலுவலகம், கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று 7 மாடி கொண்ட பிரம்மாண்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா காணொலிகாட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் தொகுதி எம்எல்ஏக்கள் , அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிகழ்வு மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.