• Sat. Apr 27th, 2024

கிஷோர் சாமியை தூக்க போலீசுக்கு புதிய அசைன்மெண்ட்!

பாஜகவுக்கு ஆதரவு என்ற பெயரில் அல்லு சில்லாக அழித்துக்கொண்டு இருப்பவர்களில் முக்கியமானவர்கள் மாரிதாஸ், கிஷோர் கே சாமி. இருவருமே கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள்.


மத்தியில் மோடி, மாநிலத்தில் அதிமுக இருந்ததால் மாரிதாஸ், கிஷோர் கே சாமி ஆகிய இருவரும் வாயை திறந்தால், கூவமாக கொப்பளிக்கும். அந்தளவுக்கு தரமற்ற வார்த்தைகளை உபயோகித்து கொண்டு அதிமுகவை குளிர செய்து வந்தனர். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வந்த போதிலும், அந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கட்டவிழ்த்து விடப்பட்ட காளைகளை போல் தமிழக அரசியலில் சுற்றி வந்தார்கள்.


இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானார். ஆட்சி மாறினாலும் திமுக அரசை கிழித்து தொங்க போடுவதில் மாரிதாஸ், கிஷோர் கே சாமி இருவருமே குறியாக இருந்தனர்.

பாஜக போர்வையில் இருந்தால், திமுக நடுங்கும் என்பது இவர்களது மனக்கணக்கு. இந்த மன கணக்கை தவிடுபொடியாக்க வாய்ப்பு கிடைக்காதா? என கண்கொத்தி பாம்பாக காத்திருந்த போலீசார் வலையில் வாண்டடா வந்து விழுந்தார் மாரிதாஸ்.

முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து மரணம் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் மாரிதாஸ் பதிவிட்டு சிறை சென்றார். தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் காத்திருந்த சிறைக்கு மாரிதாஸ் சூப்பர் விருந்தானார்.


அதேப்போல் தமிழகத்தில் ஆட்சி மாறி விட்ட நினைவு துளியும் இல்லாமல் பெரியார், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் கிஷோர் கே சாமி கேவலமாக பதிவிட்டு வந்தார். கிஷோர் கே சாமி மீது அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டதால் அவரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தன் மீதான விதிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது கிஷோர் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு கிஷோர் கே சாமி விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் சிறையிலிருந்து வந்த வேகத்தில் முதலமைச்சரை விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கிறார்.

இதுதொடர்பாக கிஷோர் கே சாமி சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அட்டைக்கத்தி எல்லாம் தளபதின்னா . அன்னபூரணியும் அம்மன் தான்’ என்று மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடி பதிவு போட்டுள்ளார். இந்த பதிவுக்கு கருணாநிதி கதை வசனத்தில் வெளியான பராசக்தி படத்தை பதிவிட்டு உள்ளார். சிறையில் இருந்து வந்த சுவடு மறைவதற்குள் மீண்டும் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்து இருப்பது திமுக மேலிடத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.


இதன் விளைவாக கிஷோர் கே சாமிக்கு எதிராக க்ரீன் சிக்னல் வந்துள்ளதாகவும், அதற்காக கழுகு பார்வையை காவல் துறை அவர் மீது பதித்து உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதால் தமிழக அரசியல் விரைவில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *