தேசிய அளவிலான கூடோ போட்டி கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி மாணவர்கள் சாதனை.
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்ற கோவை குனியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியில் கராத்தே, கிக் பாக்சிங், கூடோ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகளை அகாடமியின் நிறுவனர் பிரேம் தலைமையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்த அகாடமியில் பயின்று வரும் மாணவர்கள் தற்காப்பு கலை போட்டிகளில் மாவட்ட, மாநில,தேசிய அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் அண்மையில் தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில்,கலந்து கொண்ட பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்கள் ஒரு தங்கம் உட்பட 13 பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 2000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து தேசிய அளவிலான கூடோ போட்டியில் தமிழக அணி சார்பாக பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியை சேர்ந்த 7 மாணவர்கள் இதில் பங்கு பெற்றனர்.
சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என பல்வேறு பிரிவிகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட ஏழு மாணவர்களும் ஒரு தங்கம்,6 வெள்ளி,6 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் கோவை திரும்பிய மாணவர்களுக்கு கோவை குணியமுத்தூர் பகுதியல் உள்ள பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி முன்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் தருண்,கௌதம் மற்றும் அனஸ்வர் ஆகிய மூவருக்கும் கோவை மாவட்ட கூடோ சங்க நிர்வாகிகள் பிரேம், ஆனந்த், ஆதாம் மற்றும் பிராங்க்ளின் ஆகியோர் மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.