நாங்கள் யாருக்காகவும் கூட்டணி வைக்க தவம் கிடக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணியை திமுக, அதிமுக கட்சிகள் தொடங்கி விட்டன. அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, இனி ஒருபோதும் அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலர், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பாஜகவை நோட்டா கட்சி, தீண்டதகாத கட்சி, அக்கட்சியுடன் கூட்டணியிலிருந்ததால் தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று அதிமுகவை மறைமுகமாக சாடினார்.
இந்நிலையில் திண்டுக்கலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, அண்ணாமலை கூறிய கருத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “நாங்கள் யாருக்காகவும் தவம் இருக்கவில்லை. அண்ணாமலை எங்கள் கட்சி பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை” என்று பதிலளித்துள்ளார்.