• Wed. Oct 16th, 2024

கேரளா ரயில் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில் – கோட்டயம் ரயில் இயக்கம்!..

Byத.வளவன்

Oct 6, 2021

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில்வேத்துறை ரகசியமாக பயணிகள் மத்தியில் சுமையை ஏற்படுத்தும் விதமாக 200 கி.மீக்கு மேல் இயக்கப்படும் பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும் அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் இயங்கும் மதுரை- புனலூர், நாகர்கோவில் – கோவை பகல் ரயில் என இரண்டு ரயில்கள் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாவது ரயிலாக நாகர்கோவில் – கோட்டயம் ரயிலும் எக்ஸ்பிரஸ் ரயிலாக அக்டோபர் 6-ம் தேதி முதல் பகல் நேர எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

நோக்கம்:

இந்த நாகர்கோவில் – கோட்டயம் ரயில் இயக்க முக்கிய காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான வர்த்தக இடமான கோட்டாற்றிலிருந்து மலையாள வியா பாரிகள் கள்ள மார்க்கெட்டில் அனைத்து வித உணவு பொருட்கள், காய்கறிகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், வீடு கட்டுவதற்கான பொருட்கள் மற்றும் அனைத்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி இந்த ரயில்கள் மூலம் கேரளாவுக்கு கடத்துவதற்காக தான் என்று நம்பப் படுகிறது. தவிரவும் குமரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுவதையும் மலையாள வியாபாரிகள் வாங்கி மேற்படி ரயிலில் வெவ்வேறு ரயில் நிலையங்களிலிருந்து கடத்துகிறார்கள். இதற்காகவே இந்த ரயிலை ஒரு மார்க்கம் மட்டுமே இயக்கி மறுமார்க்கமாக இயக்காமல் இருக்கிறார்களாம்.

நிறுத்தங்கள் ரத்து:

இந்த நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டவுன், ஆளூர், பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .

போராட்டம்

திருவனந்தபுரம் கோட்டம் திடீரென நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயிலின் அறிவிப்பின் ரகசியம் குமரி மாவட்ட மக்களுக்கு தெரியாமல் இல்லை. கேரளாவில் பாலக்காடு கோட்டத்தின் கீழ் வரும் ஷொர்ணூர் – நிலாம்பூர் மார்க்கத்தில் கொரோனாவுக்கு முன்பு தினசரி ஆறு பயணிகள் ரயில்கள் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் என இயங்கி வந்தன. இந்த பகுதி உள்ள பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகள் பழைய பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக ரயில்வே துறை கோட்டயம் – நிலாம்பூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் இயங்கும் என்று அறிவித்துள்ளது.

பராமரிப்பு:

இந்த கோட்டயம் – நிலாம்பூர் ரயிலை இயக்க கோட்டயம், அல்லது நீலாம்பூர் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் பிட் லைன் வசதி கிடையாது. கோட்டையத்துக்கு அருகில் உள்ள எர்ணாகுளம் அல்லது ஆலப்புழாவில் தான் இந்த பிட் லைன் வசதி உள்ளது. கோட்டத்திலிருந்து எர்ணாகுளம் அல்லது ஆலப்புழா சென்று பராமரிப்பு பணிகள் முடிந்து திரும்பி கோட்டயம் வந்து இந்த ரயிலை இயக்க தொழில்நுட்ப காரணங்களால் முடியாத நிலை உள்ளது. ஆகவே அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக உதித்தது தான் இந்த யோசனை. இதற்கு பயன் படுவது கேரளா ரயில்களை பராமரிக்க எனவே உருவாக்கப்பட்ட நாகர்கோவில் ரயில் நிலையம். இதன்படி உதித்ததுதான் கோட்டையம் – நீலாம்பூர் ரயிலின் பராமரிப்பு பணிகளை நாகர்கோவில் செய்து விட்டு இந்த ரயிலை இயக்குவது. இதன்படி நாகர்கோவில் முதன்மை பராமரிப்பு செய்து நாகர்கோவிலிருந்து பகலில் கோட்டயம் நோக்கி புறப்பட்டு இரவு கோட்டயம் சென்றுவிட்டு மறுநாள் காலை கோட்டையத்திலிருந்து புறப்பட்டு மதியம் நிலாம்பூர் சென்றுவிட்டு மதியம் அங்கிருந்து திரும்பி புறப்பட்டு இரவு கோட்டயம் வந்து விட்டு பின்னர் நாகர்கோவிலுக்கு காலியாக இந்த ரயில் இயக்கப்பட இருக்கின்றது.

இந்த ரயில் நாகர்கோவிலிருந்து கோட்டயம் செல்லும் ரயில் மறுமார்க்கமாக கோட்டயம் – நாகர்கோவில் என்று இயக்கப்படுவது கிடையாது. இதனால் குமரி மாவட்டத்திலிருந்து கோட்டயம் பகுதிகளுக்கு சென்ற பயணிகள் திரும்பி வருவதற்கு இந்த ரயில் வரும் என்றால் இந்த ரயில் வராது. ஆகவே இந்த ரயிலை மறுமார்க்கமாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட்டிப்பு:

நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்ட காரணத்தால் இந்த ரயிலை இரண்டு மார்க்கங்களிலும் இயங்கி வேறு இடங்களுக்கு நீட்டிப்பு செய்து இயக்கலாம். அதன்படி இந்த ரயிலை ஒரு மார்க்கம் திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்து மறு மார்க்கம் எர்ணாகுளம் வரையில் நீட்டிப்பு செய்து ராமேஸ்வரம் – எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் என இயக்கலாம் என்றும் ஆலோசனையும் வைக்கப்படுகின்றது. இதன்படி இந்த ரயில் காலையில் 6:00 மணி அளவில் ராமேஸ்வரத்தில் புறப்பட்டு மதியம் 13:00 மணிக்கு நாகர்கோவில் வந்து இரவு 10 மணி அளவில் எர்ணாகுளம் செல்லுமாறும் மறுமார்க்கம் இந்த ரயில் எர்ணாகுளத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு மதியம் நாகர்கோவில் விட்டுவிட்டு இரவு 9:00 மணி நேரத்தில் ராமேஸ்வரம் செல்லத்தக்க வகையில் இயக்கலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்படுகின்றது.

கேரளா ரயில்களின் கழிவறை

நாகர்கோவில் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதால் கேரளாவில் இயங்கும் ரயில்கள் பராமரித்து கழுவி தண்ணீர் பிடித்து செல்லும் கழிவறை ஆகவே பயன்படுத்தி வருகிறது. தற்போது கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலை தினசரி ரயிலாக அறிவித்துள்ளது. இந்த ரயில் நாகர்கோவிலில் தினசரி பராமரிப்பு செய்து இயக்க வேண்டும். இதற்கு முன்பு திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா ரயிலை நாகர்கோவிலுக்கு பராமரிப்புக்கு என கொண்டு வந்தது. கடும் எதிர்ப்பு வந்ததும் இந்த திட்டம் ஒரு வாரத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டது. பராமரிப்புக்காக கொச்சுவேலி – நிலாம்பூர் ரயிலை நாகர்கோவிலுக்கு நீட்டிக்கும் திட்டமும் கோட்டத்தின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு கேரளா ரயில்களை பராமரித்து நாகர்கோவிலிருந்து இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *