• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி

ByP.Kavitha Kumar

Jan 8, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தது தவறுதான். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடவேண்டும். அதன் பிறகுதான் தேசிய கீதம் பாடவேண்டும். அதை மாற்றியமைக்க ஆளுநர் முயற்சி செய்வது தமிழ் இனத்தை அவமதிப்பதாக கருதப்படுகிறது. இதை திமுக தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, அனுமதியும், போராட இடமும் தரவில்லை. தடையை மீறியதால் எங்களை கைது செய்தனர். ஆனால், திமுக தன் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதுதான் தமிழ்நாட்டில் திமுக கடைப்பிடிக்கக்கூடிய ஜனநாயகம்.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை எந்த கொம்பன் வந்தாலும் அந்த இடத்தில் ஒரு கல்லைக்கூட புரட்டிப்போட முடியாது. தமிழ் மண்ணின் வளத்தைக் காக்க மட்டுமே நாம் தமிழர் கட்சி இருக்கும். நிலத்தின் வளத்தை கெடுக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மண்ணில் வர விட மாட்டேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்” என்றார்.