• Thu. Apr 24th, 2025

தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் கடும் கண்டனம் !!!

BySeenu

Mar 24, 2025

கோவை, மருதமலையில் உள்ள முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி துண்டறிக்கை விநியோகம் செய்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கண்டனம் தெரிவித்து சீமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மாநிலத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய வியாபாரம் போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த திராணியற்ற தி.மு.க அரசு, துண்டறிக்கை விநியோகம் செய்ததற்காக என் தம்பி, தங்கைகளை கைது செய்து இருப்பது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், அன்னை தமிழில் அர்ச்சனை என்று கூறிய தி.மு.க அரசு, தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோருபவர்களை கைது செய்வது ஏன் ? தமிழ் மொழியை காக்க இந்தி திணிப்பை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க அரசு, சமஸ்கிருத திணிப்பை வழிபாட்டில் வலிந்து செய்வது ஏன் ? மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாக கூறி விட்டு, சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவது தான் திராவிட மாடல் ஆட்சியா ? என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமூக அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் ஊறு விளைவிக்கும் சமூக விரோதிகளை வெளியில் சுதந்திரமாக உலவ விடும் தி.மு.க அரசு, துண்டறிக்கை விநியோகம் செய்தவர்களை கைது செய்தால், இது மக்களாட்சியா ? பாசிச ஆட்சியா ? என்றும் சீமான் விமர்சித்து உள்ளார்.

தி.மு.க அரசின் அடக்குமுறை, ஒடுக்குமுறை, கபட நாடகங்கள் என அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரும், பதவி மமதையும் அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் சீமான் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.