• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

முத்துப்பட்டியில் முத்து முத்தாய் கல்வெட்டு…

ByKalamegam Viswanathan

Sep 8, 2025

220 ஆண்டுக்கு முந்தைய நீர் மேலாண்மை!

சிவகங்கை முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் முதல் ஜமீன்தார் கௌரி வல்லவ மகாராஜா கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு முத்துப்பட்டியைச் சேர்ந்த நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தங்கள் ஊரில் கல்வெட்டு இருப்பதாகவும் அதில் உள்ள செய்தியை வாசித்து தரும்படியும் அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர், இரா.நரசிம்மன் கள ஆய்வு செய்தனர்.

 இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா அரசியல் டுடே விடம் பேசியபோது,’

”சிவகங்கை முத்துப்பட்டியில் அமைந்துள்ள பெரிய தெப்பக்குளத்தின் கிழக்குப் பகுதியில் தண்ணீர் வரத்து மடையின் கட்டுமான மேல்பகுதியில் கல்வெட்டு ஒன்று உள்ளது.

இக் கல்வெட்டு இந்த தெப்பக்குளத்திற்கு மேல் பாத்திப் பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கற்பாதை அமைத்த செய்தியைக் கூறுகிறது.

 இந்த தெப்பக்குளம் செம்பூரான் கல்லால் நான்கு பகுதிகளிலும் அகலமான படிக்கட்டுகளைக் கொண்டு மிக அழகாக கட்டப்பட்டுள்ளது மேலும் இந்த தெப்பக்குளத்தில் ஐந்து இடங்களில் தண்ணீரை இறைக்கும் கமலை போடுவதற்கான கால்களும் நீட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இது விவசாயத்தேவைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

 கல்வெட்டு   நீளமாக ஐந்து வரிகள் எழுதப்பட்டுள்ளன.

1. உ கலியாத்தம் 4906 சாலிவாகன சகாப்தம் 1727

2. இதில் மேல் செல்லா நின்ற குரோதன வருஷம் அப்பிகை மீ 12 உ

 3.சிவகங்கைக்கு மேல் பார்சத்தில் உபையமாக கற்பாதையில் ஸ்ரீ மது

 4.பிரிச்சி நிலையிட்ட முத்து விசய ரெகுநாத கெவுரி  வல்லப பெரிய

 5.உடையாத் தேவரவர்களதறம்.

 இதில் குறிப்பிடப்படும் சாலிவாகன சகாப்த ஆண்டின் படி 1805 இல் குரோதன வருஷம் ஐப்பசி மாதம் 12ஆம் தேதி  மேல் பார்த்தி பகுதியில் இருந்து வரும் வரத்துக் கால்வாய் தெப்பக்குளத்தில் உள்நுழையுமிடத்தில் முத்து விஜய ரெகுநாத  கௌரிவல்லப பெரிய உடையாத்தேவர் அறச்செயலாக கற்பாதை அமைத்துக் கொடுத்ததை கல்வெட்டு தெரிவிக்கிறது.

 மற்றொரு கல்வெட்டு. புலி சுட்டு குத்தினது.

படமாத்துரை அடுத்த சித்தாலங்குடியில் மகாராஜா கோவில் அமைந்துள்ளது. இது சிவகங்கையின் முதல் ஜமீன் கௌரி வல்லப மகாராஜாவிற்காக அமைக்கப்பட்டுள்ளது. இககோவிலில் வழிபட்டு வேங்கைப்புலி வேட்டைக்குச் சென்ற இரண்டாம் போதகுரு ராஜா பிரான் மலையில் புலி சுட்டு குத்தினதற்காக படமாத்தூர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டி வைத்ததாக படமாத்தூர் கோவிலில் கல்வெட்டு ஒன்று உள்ளது.

அதே மன்னர் அந்த நேர்த்திக் கடனுக்காக சிவகங்கை முத்துப்பட்டியில் மகாராஜா கோவிலுக்கு திருப்பணி செய்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

 கல்வெட்டுச் செய்தி.

 1861 துன்மகி ஆண்டு பிரான் மலையில் வேங்கைப் புலி சுட்டு குத்தின பிரார்த்தனைக்காக மகாராஜா போதகுரு இந்தத் திருப்பணியை செய்தார் என கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு. 1861 ஆண்டு இச்சரியான துன்மகி வருஷம்   வைகாசி மீ 26  உ மகாராஜா சத்ரபதி   போதகுரு மகாராஜா அவர்கள் பிரான்மலைக்கியில் வேங்கைப் புலி சுட்டு குத்தின பிரார்த்தனைக்காக யிந்த திருப்பணி கட்டினது.

 முத்துப்பட்டி என்ற ஊரின் பெயர் முத்து விஜய ரகுநாத என்ற அடைமொழியில் உள்ள முத்து என்பதை குறிப்பதாக இருக்கலாம் இவ்வூர் சிவகங்கையை ஆண்ட கௌரி வல்லப மகாராஜாவால் அனைத்து மதம் மற்றும் இன மக்களைக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இப்பகுதியின் பழைய பெயர் அய்யனார் புரம் என்பதாகும். மக்கள் மகாராஜாவை தங்களது இஷ்ட தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர் தங்களது குழந்தைகளுக்கும் கௌரி  என்ற பெயரை இன்றளவும் சூட்டி மன்னருக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.