• Fri. Mar 29th, 2024

திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடை போட தடை..வன்மத்தை கக்கும் கர்நாடகா

உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய கர்நாடக கடலோர மாவட்டங்களில் கோவில்களின் திருவிழாக்களின்போது முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவில்கள் அருகே பேனர்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கடலோர கர்நாடக மாவட்டங்களாக அழைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில்கள் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்கள் களைகட்டவில்லை. பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு திருவிழாக்கள் முடித்து கொள்ளப்பட்டன.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு கோவில்களில் வெகுவிமரிசையாக திருவிழாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோவிலில் ஏப்ரல் 20ல் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். இந்நிலையில் கடை அமைப்பதற்கான ஏலம் மார்ச் 31ல் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உடுப்பி மாவட்டம் காபுவில் உள்ள ஒசமாரிகுடி கோவில் திருவிழா நேற்று துவங்கியது. இன்று முடிவடைய உள்ளது. இந்த திருவிழாவிலும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மார்ச் 18ல் நடந்த கடைகள் ஏலத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து உடுப்பி மாவட்ட தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் முகமது ஆரீப் கூறுகையில், ‘இந்த சங்கத்தில் மொத்தம் 700 பேர் பதிவு செய்த வியாபாரிகளாக உள்ளனர். இதில் 450 பேர் முஸ்லிம்கள். முதலில் காபுவில் உள்ள மாரிகுடி கோவில் திருவிழாவின் போது முஸ்லிம் வியாபாரிகளை அனுமதிக்கக் கூடாது என்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது படுபித்ரி, ஓடபண்டேஸ்வரா, பெர்தூர், பெர்னாங்கிளா கோவில் திருவிழாக்களிலும் முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்து சகோதரர்களின் உணர்வுகளை நாங்கள் ஒருபோதும் புண்படுத்த மாட்டோம். கோவில் நிர்வாகம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேச தயாராக இருக்கிறோம். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் அதிகமாக பாதித்தது. இப்போது சம்பாதிக்கலாம் என நினைக்கும்போது கோயில் கமிட்டியினர் ஒதுக்கி வைக்கின்றனர். இதுவரை இந்து, முஸ்லிம் வியாபாரிகள் சகோதரர்களாக வியாபாரம் செய்தனர். எனவே முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இதேபோல் கடந்த வாரம் சிவமொக்காவில் உள்ள கோட்டை மாரிகம்பா கோயிலில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தட்சிண கன்னடா மாவட்டம் முல்கி டவுன் ஸ்ரீதுர்காபரமேஸ்வரி கோயிலில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘சட்டத்தை மதிக்காதவர்கள், பசுக்களை கொல்லும் நபர்களுக்கு கடை அமைக்க அனுமதியில்லை” என கூறப்பட்டுள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பாக பியூ கல்லூரியில் பிரச்சனை ஏற்பட்டது. சில கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், ஹிஜாப்புக்கு அனுமதி கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உடுப்பி மாணவிகள் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடையை உறுதி செய்தது. இதை கண்டித்து மார்ச் 18 ல் கர்நாடகத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தற்போது கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *