• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் நகராட்சி வரி வசூல் வேட்டைஎன்ற பெயரில் அடாவடி..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார கடைகள் வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் நகராட்சிக்கு சொத்து மற்றும் தொழில் வரி செலுத்தி வருகின்றனர். வரி செலுத்தாத பட்சத்தில் நகராட்சி வரி வசூலிப்பாளர்கள் நேரடியாகச் சென்று வசூல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

சாத்தூர் பிரதான மெயின் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர மோட்டார் வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. அதற்கு முறையாக வாடகை மற்றும் சொத்து வரி ஆகியவற்றை கோவில் நிர்வாகத்திடமும் தொழில் வரியை நகராட்சியிலும் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென சாத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் ஏற்றும் வாகனத்தில் ஜப்தி வாகனம் என்னும் சிறு அறிவிப்பு பதாகையுடன் விற்பனை நிறுவனத்தின் வாயிலில் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டது கண்டு நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு நேற்றைய தேதியிட்ட (18.03.2025) ஒரு ரசீது ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சீட்டையும் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. வரி வசூல் செய்வதற்கு இதுபோன்று கழிவுநீர் வாகனத்தை நிறுவனத்தின் முன்னாள் இடையூறாக நிறுத்தி வைத்து அடாவடி செய்து வருவது வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுவரை 10 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையே செலுத்தி வந்த வரியானது தற்பொழுது பல மடங்கு அதிகப்படுத்தி வரியை அறிவித்துள்ளதாகவும் இது குறித்து நகராட்சி ஆணையாளரும் முறையிட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வரியானது பன்மடங்கு உயர்த்தியுள்ள நிலையில் இதுகுறித்து எந்தவித முன் அறிவிப்பும் இல்லை என்றும் தங்களது வியாபாரத்தை பாதிக்கும் வகையில் வரி வசூல் என்ற பெயரில் செயல்படும். இது போன்ற நகராட்சி நடவடிக்கை மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் புலம்புகின்றனர்.