• Thu. May 2nd, 2024

சோழவந்தான் அருகே சேறும் சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..!

ByKalamegam Viswanathan

Jan 6, 2024
சோழவந்தான் அருகே தச்சம்பத்து  முதல் சாய்பாபா கோயில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேரும் சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சிறுமழை பெய்தாலே சாலை ஓரங்களில் சேரும் சகதியும் தேங்கி விடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம் இந்த பகுதியில் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய்க்கான  பைப் லைன் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல் பெயரளவிற்கு மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மூடி விட்டு சென்றதால் சிறு மழை பெய்தவுடன் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
குறிப்பாக இந்த பகுதியில் ஒரு புறத்தில் வாகனம் செல்வதே மிகவும் சிரமமான நிலையில்  எதிர்திசையில் வரும் வாகனங்கள் சகதிக்குள் சிக்கிக் கொள்ளும் அவலம் நடைபெறுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும்  தொடர்ச்சியாக பத்திரிகைகளில் செய்திகள் வந்த பிறகும் எந்த ஒரு அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்..,
மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் மெயின் ரோட்டில் உள்ள சாலைகளின் ஓரங்களில் சேரும் சகதியும் தேங்கி அருகில் உள்ள வீடுகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு வாரத்திற்குள் இந்த சாலைகளை சரி செய்யவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *