• Mon. Jun 5th, 2023

உயிர்நீத்த பஞ்சாப் விவசாயிகளுக்கு நினைவு சின்னம்: முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

Byகாயத்ரி

Nov 20, 2021

வேளாண் போராட்டத்தில் உயிர் நீத்த பஞ்சாப் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.


முன்னதாக நேற்று, நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு தத்தம் பணிக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்தார்.
சற்றும் எதிர்பார்க்கப்படாத இந்த அறிவிப்பு விவசாயிகளை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் சட்டம் ரத்தாகும் வரை காத்திருப்போம் என்று போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, வேளாண் சட்டங்கள் வாபஸை வரவேற்றுப் பேசியுள்ளார்.


அப்போது அவர், “இந்திய சுதந்திர போராட்டத்துக்குப் பின் தேசத்தில் மிகப்பெரிய போராட்டம் ஒன்று நடந்தது என்றால் அது விவசாயிகளின் 3 வேளாண் சட்டங்கள் எதிர்ப்புப் போராட்டம் தான். விவசாயிகளின் போராட்டம் ஜனநாயகத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், அந்தக் குடும்பங்களில் உள்ளவர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.


இந்நிலையில், வேளாண் போராட்டத்தில் உயிர் நீத்த பஞ்சாப் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும்.வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்தும், விவசாயப் பொருட்கள் கொள்முதல் விலை குறித்தும் தெளிவாக, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


அதேபோல், விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் நிதிஉதவித் திட்டங்கள் பிரதமர் மோடி உடனே அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *