• Thu. May 2nd, 2024

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்..!

Byவிஷா

Jul 19, 2023
நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில், மத்திய அரசு 21  மசோதாக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவர பிரச்சினையை எழுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளன. மேலும் விலைவாசி விவகாரம், விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துவது ஆகிய பிரச்சினைகளையும் எழுப்ப உள்ளன.
அதற்கு முன்னதாக, இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் நடக்கும் வழக்கமாக நடைபெறுகிற ஒன்று என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முன்பு மூத்த மத்திய அமைச்சர்கள் நடத்திய அனைத்து கட்சி கூட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளன.  இத்தகைய கூட்டங்களில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டுள்ளார்.  இன்று நடைபெறும் கூட்டத்தில், மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தொடரைச் சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்கும் என்று தெரிகிறது. நேற்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், தனியாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவிலும், பாஜக கூட்டணி தலைவர்கள் டில்லியிலும் ஆலோசனை நடத்தி வந்ததால், கூட்டத்துக்கு யாரும் வரமுடியாத சூழல் ஏற்பட்டது.  ஆகவே, அக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *