• Thu. May 2nd, 2024

திசையன்விளை அருகே நிரம்பி வழிந்த அதிசய கிணறு..!

Byவிஷா

Dec 20, 2023

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே பல ஆண்டுகளாக தண்ணீரில்லாமல் இருந்த அதிசய கிணறு, தற்போது பெய்துள்ள கனமழையின் காரணமாக நிரம்பி வழிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் அதிசய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு பல ஆண்டுகளாக நீர் நிரம்பாமல் அதிசய கிணறாக அந்த பகுதியில் இருந்து வந்தது. பொதுமக்கள், எவ்வளவு மழை பெய்தும் நிரம்பாத கிணறை அதிசயத்துடனே பார்த்து, சென்றார்கள். பேய் மழை பெய்த காலங்களிலும் எவ்வளவு தண்ணீர் சென்றாலும் உள்வாங்கிக் கொண்ட கிணறு, நிரம்பாமல் அத்தனைத் தண்ணீரையும் உள்ளே இழுத்துக் கொண்ட செய்தி வைரலான நிலையில், ஆராய்ச்சியாளர்கள் அதிசய கிணறு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 2022-ல் பெருமழை பெய்து உருவான வெள்ள நீர் கிணறுக்குள் திருப்பி விடப்பட்டது. அப்போதும், இந்த கிணறு நிரம்பவில்லை. இதையடுத்து, ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்த கிணறு, முழுக்க சுண்ணாம்புப் பாறைகளால் உருவானது என்பது தெரிய வந்தது. கிணறு முழுவதும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டிருப்பதால் தண்ணீரை உள்வாங்கி கொள்வதாகவும், நிலத்தடி நீர் இதனால் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த மழையில், நேற்று மாலை வரையில் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு வேகமாக நிரம்பியதால் பலரும் ஆச்சரியத்துடன் இதைப் பற்றி பேசுகின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த கிணற்றில் தண்ணீர் கொட்டி வருவதால், பாறையில் துளைகள் ஏற்பட்டது. அவை பெரிதாகி, 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடியில் நீர்வழிப்பாதை உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே கிணறு நிறைவதில்லை என கண்டறியப்பட்டது. தற்போது நான்கு மாவட்டங்களை வெள்ளம் மூழ்கடித்து வரும் நிலையிலும், இந்த அதிசயக் கிணறு நேற்று வரை நிரம்பவில்லை.
இந்நிலையில், பல ஆயிரம் கன அடி நீரையும் உள்வாகும் திறன் கொண்ட ஆயன்குளம் அதிசய கிணறு திடீரென நிரம்பியதாக தகவல் பரவியது. அது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அந்த சுற்று வட்டாரப்பகுதி முழுவதும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், கிணறு நிரம்பியதற்கான காரணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கிணற்றின் ஓரம் உள்ள மண் சுவர் இடிந்து, கிணற்றுக்குள் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கிணறு நிரம்பியது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *