

உசிலம்பட்டியின் முக்கிய வீதியை முற்றிலுமாக அடைத்து நகராட்சி நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையை எல்.ஈ.டி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநில வருவாய்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் தாக்கலை தமிழ்நாடு முழுவதுமாக மாநகராட்சிகள், நகராட்சி மற்றும் பேருராட்சி பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் எல்ஈடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் குறித்த நேரடி ஒளிபரப்பு எல்ஈடி திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர் மன்ற தலைவர் சகுந்தலா, துணை தலைவர் தேன்மொழி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளில் ஒன்றாகவும், சுமார் 20 அடி அகலமுள்ள முருகன் கோவில் தெருவை முற்றிலுமாக அடைத்து கொட்டகை அமைத்து எல்ஈடி திரை மூலம் பட்ஜெட் கூட்டத் தொடரை நகராட்சி நிர்வாகத்தினரே ஒளிபரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருக்கட்டான்பட்டி, அருணாச்சலம்பட்டி மற்றும் நகராட்சிக்குட்பட்ட சுமார் 5க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பிரதான வீதியில் இருசக்கர வாகனங்கள் அதிகம் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் அதிகம் காணப்படுவதாக தொடர் கோரிக்கைகள் எழுந்து வரும் சூழலில், தற்போது நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே இந்த பிரதான வீதியை அடைத்து விழா நடத்திய சம்பவம் பெரும் பேசு பொருளாகியுள்ளது.


