மின்சாரத் துறையின் சார்பில் செய்யப்படும் கொள்முதலில், எந்தத் தலையீடும் இல்லை. எந்த தவறும் நடக்கவில்லை” என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார்.
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ₹9.67 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் அமைய உள்ள இடங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில்.., முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ₹9.67 கோடி மதிப்பில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
கோவை மாநகராட்சியை பொருத்தவரை ஏறத்தாழ ₹935 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்று அந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறினார். மேலும், கோவையின் வளர்ச்சிக்காக கடந்த முறை கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர், கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ₹200 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளதாகவும் சாலைகள் அமைப்பதற்கான சாலைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் அரசின் ஒப்புதலை பெற்று அந்தப் பணிகளும் தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
கோவைக்கு வருக தந்த முதலமைச்சர், ஏற்கனவே தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் போர்க்கால அடிப்படையில் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், சாலை அமைப்பதற்கான பணிகளின் ஒப்புதல் வருவதற்கு முன்பே பாதாள சாக்கடை பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்றார். கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவில் தொடங்கும் என்றார்.
கடந்த ஆட்சியில் சாலைகள் போடாமல் விட்டதால் இப்போது சாலைகள் அமைப்பதற்கான கோரிக்கை வருவதாகவும் அந்தக் கோரிக்கைகளை முதலமைச்சர் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் கூறினார்.
மின் மாற்றி கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக வெளியான புகார் குறித்த கேள்விக்கு, மின்சாரத் துறையின் சார்பில் கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து உபகரணங்களும் முறையாக ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்படுவதாகவும் அதற்காக ஒரு குழு இருப்பதாகவும் அந்த குழு தான் விலைப்பட்டியலை நிர்ணயம் செய்து, விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்பதை தீர்மானித்து அதற்கான உத்தரவுகளை வழங்குவதாகவும் கூறினார். கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்பொழுதும் பின்பற்றப்படுவதாகவும் இதில் தலையீடுகள் ஏதுமில்லை என்றும் கூறினார். எனவே இதில் எந்தவித தவறுகளும் நடக்கவில்லை என்றார்.
