• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை ஒத்தக்கடை பதிவு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமைத் துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி..!

Byகுமார்

Oct 11, 2021

தமிழகம் முழுவதுமுள்ள 50 மாவட்ட பத்திரப்பதிவு அலுவலங்களில் திங்கள் தோறும் நடைபெறவுள்ள பதிவுத்துறை சார்ந்த குறைதீர்க்கும் முகாமினை, மதுரை ஒத்தக்கடை பதிவு அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துப் பேசியதாவது..,
தமிழகம் முழுவதும் வாரம் தோறும் நடைபெறும் இந்த குறைதீர்ப்பு முகாம்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களை மக்களின் வசதிக்கேற்ப பிரித்து கூடுதலாக 50 பத்திர பதிவு அலுவலங்களில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


பதிவுத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பதிவு எழுத்தர்கள், அதிகாரிகளிடம் பய உணர்வு வந்துள்ளது, இதனால் போலி பதிவுகள் குறைந்து உள்ளன. போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்பதிவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம். வட மாநிலங்களில் இருந்து சென்னை ரயில் நிலையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 35 லாரிகள் பறிமுதல் செய்து அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் 103 ஜவுளிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 108 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரிப்பணத்தை கட்டுவதற்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்கள் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


ஆளும் கட்சியினர் அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்வதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், “அவர்கள் என்ன காந்தியா? முந்தைய ஆட்சியில் அமைச்சர்கள் அதிகாரிகளை கலக்ஷன் செய்யவே பயன்படுத்தினார்கள். யார் யார் என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்ற விபரங்கள் ஆதாரத்துடன் உள்ளன வெளிப்படையாக சொல்லவும் நான் தயார்” என்றார்.