• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் ஆய்வு..,

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கனமழை பெய்ததின் எதிரொலியாக சட்டசபை நிகழ்ச்சியில் இருந்த அமைச்சர் கீதாஜீவன், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி வந்து மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பழைய மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பி அன்ட் டி காலனி,  கோக்கூர், கதிர்வேல்நகர், திரேஸ்புரம், இன்னாசியபுரம், இருதயம்மாள்புரம், முத்தையாபுரம், தங்கம்மாள்புரம், தோப்புத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

இதனையறிந்து சட்ட சபை நிகழ்ச்சியில் இருந்த வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தூத்துக்குடி மழை நிலவரத்தை தெரிவித்தார். உடனடியாக அவரை தூத்துக்குடிக்கு செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதன்பேரில் சட்ட சபையில் இருந்து கிளம்பிய அமைச்சர் கீதாஜீவன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு விரைந்து வந்தார்.  அவர் நேரடியாக மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் அனுமதியுடன் உடனடியாக தூத்துக்குடி வந்து மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டேன். தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் உயர்தர மின் மோட்டார் மூலம்  வெளியேற்றப்பட்டது. கடந்த ஆண்டுகளை போல தற்போது மழைநீர் தேங்கவில்லை. 

சில இடங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் பகுதிகளில் தற்காலிகமாக மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று கூறினாா். பின்னா் மாநகர பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது, தூத்துக்குடி மருத்துவகல்லூரி டீன் சிவகுமார், உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெயமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.”