• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அடுக்குமாடி வழியாக மெட்ரோ ரயில்கள் திட்டம்..,

Byஜெ.துரை

Jun 11, 2025

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளாக 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் 5-வது வழித்தடம் ஒன்றாகும்.

இந்த வழித்தடத்தில் திருமங்கலம் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம், வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 9 மாடிகளை கொண்ட ஏ, பி, சி என 3 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

இத்திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த கட்டிடத்தில் பல்வேறு அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பது போன்று சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னை திருமங்கலத்தில் 4 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

இது, முதல்கட்டத்தில் உள்ள திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அண்ணாநகர் மேற்கு பணிமனைக்கு எதிரே உள்ள இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏ, பி, சி, டி என நான்கு கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏ, பி, சி-ல் தலா ஒரு 9 மாடி கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

பி கட்டிடத்தில் 3-வது தளத்தில் பயணிகள் கூடும் இடமும், நான்காவது தளத்தில் மெட்ரோ ரயில் நடைமேடையும் அமைகிறது. ஏ, பி, சி கட்டிடங்களில் தரைதளத்தில் சில்லறை கடைகள், இரண்டாவது தளத்தில் வணிக வளாகம் அமைய உள்ளது. சில தளங்களில் மால்களும் இடம்பெற உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.