வாடிப்பட்டியில் உள்ள நீரேத்தான் மேட்டுநீரேத்தான் ஆதி அய்யனார் கோவில் திருவிழா யாருக்கும் முதல் மரியாதை இன்றி நடத்த வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நீரேத்தான் மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு சொந்தமான ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடுவதில், பொதுமக்களின் இரண்டு பிரிவினர்களிடையே, பிரச்சனை இருந்து
வந்தது. இந்த நிலையில், வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தியதில், யாருக்கும் முதல் மரியாதை இன்றி திருவிழா நடத்த சுமுகமான முடிவு ஏற்பட்டதன் விளைவாக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து, பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கையில், நீரேத்தான் மேட்டுநீரேத்தான் அய்யனார் கோவில், புரட்டாசி பொங்கல் திருவிழாவை உயர்
நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல் படி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தாக்கல் செய்யப்பட்ட, உத்தரவுப்படி சட்டத்திற்கு உட்பட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரும் சட்ட விதிகளின்படி அமைதியான முறையில் வாடிப்பட்டி ஆய்வாளர் தலைமையில் தக்க பாதுகாப்புடன் விதிமீறல் இன்றி, தனி நபருக்கோ தனி சமுதாயத்திற்கோ, ஜாதி அடிப்படையில் எவருக்கும் முதல் மரியாதை இல்லாமல், திருவிழாவை சுமூகமாக நடத்துவது என வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், அறநிலையத்துறை அதிகாரி வழிகாட்டுதல்படி, திருவிழாவை நடத்துவது என்றும், திருவிழா நடத்துவதற்கு பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.