• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வாட்ஸ் அப்பில் வருகிறது மெட்ரோ ரயில் டிக்கெட்..!

ByA.Tamilselvan

Dec 2, 2022

மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது என்று, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில், தினமும் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக, பயண அட்டை முறை, ‘க்யூ ஆர்’ குறியீடு முறை போன்ற நடைமுறைகள் உள்ளன. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக, வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம்) கூறியதாவது: “வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் அப் எண் வழங்கப்படும். இது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான செல்போன் எண். இந்த எண்ணுக்கு ‘ஹாய்’ என்று குறுந்தகவல் அனுப்பினால், ‘சார்ட் போட்’ என்ற தகவல் வரும். அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஒரு தகவல் இருக்கும். அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம்,சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ் அப் மூலமோ, ஜிபே, யு-பே மூலமோ பணம் செலுத்தினால், வாட்ஸ் அப் எண்ணுக்கு டிக்கெட் வந்துவிடும்.
இது, தினசரி பயண டிக்கெட் ஆகும். இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள ‘க்யூஆர்’ குறியீடு ஸ்கேனரில் காண்பித்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். அதுபோல், வெளியே செல்லும் இடத்தில் உள்ள ‘க்யூ ஆர்’ குறியீடு ஸ்கேனரில் காண்பித்து வெளியே செல்ல முடியும்” என்று அவர் கூறினார்.