• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நல்லிசைப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூண்..,

ByKalamegam Viswanathan

Apr 29, 2025

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் , தமிழ்க்கவிஞர் நாளையொட்டி, சங்க கால நல்லிசைப் புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி தெரிவிக்கையில்,
தமிழ்க்கவிஞர் தினமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 29-ஆம் தேதியன்று, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூரில் சங்க கால நல்லிசைப்புலவரான ஒக்கூர் மாசாத்தியாருக்கு தமிழக அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூணிற்கு இந்தாண்டும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2025 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை விதி எண் :110-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிற்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்றையதினம் (29.04.2025) முதல் மே 5 ஆம் தேதி வரை ”தமிழ் வார விழா” கொண்டாடிட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினமான இன்றையதினம் ஒக்கூர் மாசாத்தியார் அவர்களின் நினைவுத்தூணிற்கும் மற்றும்
இதேபோன்று, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மகிபாலன்பட்டியில்
சங்கப்பெரும் புலவர் கணியன் பூங்குன்றனாரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூணிற்கும் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மேலும், ”தமிழ் வார விழாவினை” முன்னிட்டு, நாளையதினம் பள்ளிக் கல்வித்
துறையின் சார்பிலும், அதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த பொது துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்கள் ஆகியவைகளில் ”தமிழ் வார விழா” கொண்டாடிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே அலுவலக தமிழ் மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், கையெழுத்து போட்டிகள், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் குறித்த வினாடி வினா நிகழ்ச்சிகள், தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் யாதொரு தயாரிப்பும் இன்றி உடனடியாக பேசும் பேச்சுப் போட்டி, படத்தை அடிப்படையாக கொண்டு கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினங்கள் / கவிதை வாசிப்பு போட்டி, அலுவலகர்களிடையே குறிப்பு எழுதுதல் மற்றும் வரைவு எழுதுதல் போட்டி, கணினித் தமிழ் தொடர்பான போட்டிகள், தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக கதை சொல்லும் போட்டிகள், தமிழ் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறவுள்ளது. இதில், சிறப்பான பங்களிப்பை அளித்திடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

இதுபோன்று, பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம் மொழி ஆகியவற்றை போற்றி பாதுகாத்திடும் வகையில், தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,
தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ச.சீதாலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன், தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.