• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அதில், -ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் மருத்துவ கவுன்சில் தேர்தலின் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் இந்த தேர்தலை நடத்த வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, மருத்துவ கவுன்சிலின் வாக்காளர் பட்டியல் வெளியிடாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நியாயமான முறையில் ஆன்லைன் வாயிலாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்டம், 1914-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சென்னை மருத்துவ பதிவு சட்டமாகும். இதில், ஆந்திரா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் செனட் உறுப்பினர்களும், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் விசாகப்பட்டினம் மருத்துவ கல்லூரிகளின் டாக்டர்களும் பிரதிநிதிகளாக நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பின், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஆந்திரா பல்கலைக்கழக செனட் உறுப்பினரை யும், விசாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி டாக்டர்களையும் எப்படி நியமிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், இந்த சட்டமும், விதிகளும் 3 மாதங்களில் முழுமையாக திருத்தப்படும் என்றார். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், மனுதாரர்கள் தேர்தல் சட்டம் குறித்து கேள்வி எழுப்பவில்லை என கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஆந்திர மாநில உறுப்பினர்களை நீக்கிவிட்டு, சென்னை மருத்துவ பதிவு சட்டத்தையும், விதிகளையும் தமிழக அரசு 3 மாதங்களில் முழுமையாக திருத்தம் செய்ய வேண்டும். அதுவரை மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது. தேர்தலை ஆன்லைனில் நடத்துவது குறித்தும் விதிகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.