வித்தியாசமான தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் ‘ரிப்பப்பரி’ படம்
தனபால்
AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.
மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார்.
திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார்.வரும் ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஏப்ரல் 8 அன்று சென்னையில்நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் பேசும்போது,
“முதன்முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்றபோது பயம் அதிகமாக இருந்தது.ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும். அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முயற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது.
என்னதான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்தக் கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள். அவர்களால்தான் இந்தப்படம் சாத்தியமானது.திவாரகா தியாகராஜன் இசை, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு, முகேன் வேல் எடிட்டிங் இந்தப் படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படத்தின் மூலம் எனக்கு ஒரு சகோதரராக கிடைத்துள்ளார். எனது வேலையைப் பாதி அவரே செய்து விடுவார். அவருக்குள் சினிமா ஊறியிருக்கிறது. அவருக்கான காலம் விரைவில் வரும்.
அவரைத் தாண்டி ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி என எல்லோருமே சிறப்பாகச் செய்துள்ளார்கள். இது உங்களை மகிழ்விக்கும் ஒரு அழகான காமெடி படம். வரும் ஏப்ரல் 14 தினத்தன்று இத்திரைப்படம் திரைக்கு வருகிறது. ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.
ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் பேசும்போது,
“இந்த ரிப்பப்பரி படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் கதை உருவாகும்போதே, ஜாதி பற்றி வரும் இடங்களில், யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன். படம் மிக நன்றாக வந்துள்ளது. என்னுடைய கேமரா டீமிற்கு நன்றி. அவர்கள் உழைப்பால்தான் என்னால் ஈஸியாக வேலை செய்ய முடிந்தது. மாஸ்டர் மகேந்திரனுடன் வேலை பார்த்த அனுபவம் அட்டகாசமாக இருந்தது. அவர் மிக மிக நல்ல மனிதர். படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி..” என்றார்.
இசையமைப்பாளர் திவாரகா தியாகராஜன் பேசும்போது,
“இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோதே இது அட்டகாசமாக இருக்குமென்று தெரிந்தது. நாங்கள் குறும் படம் எடுக்கும் காலத்திலிருந்தே நண்பர்கள். இந்தப் படத்தில் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருந்தது. என்னிடம் நிறைய வேலை வாங்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் மிக நன்றாக நடித்துள்ளார். படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.
நடிகர்ஶ்ரீனி பேசும்போது,
“இந்தப் படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் AKவுக்கு நன்றி. படத்தில் பேயாக வருவது நான்தான். என் படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. இந்தப் படத்தில் பேயாக நடித்தது சவாலாக இருந்தது. நல்ல படம் செய்திருக்கிறோம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. எனக்கு ஜோடியாக காவ்யா நடித்திருக்கிறார். என் சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக இந்தப் படத்தில் என்னையும் கொஞ்சமாகக் காதலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர், அவருக்கு நன்றி. இந்தப் படம் நல்ல எண்டர்டெயினராக இருக்கும்…” என்று உறுதியளித்தார்.
நடிகை காவ்யா பேசும்போது,
“இதுதான் என் முதல் திரைப்பட மேடை. வாய்ப்பு தந்த இயக்குநர் அருண் கார்த்தி அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் பாரதி எனும் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். மாஸ்டர் மகேந்திரன் என் நண்பர். ஆனால் இப்படத்தில் ஶ்ரீனி உடன்தான் எனக்கு அதிக போர்ஷன் இருந்தது. எனக்கு எல்லோரும் ஆதரவாக இருந்தார்கள். இங்கு இருக்கும் அனைவருமே சூப்பராக வேலை பார்த்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்துள்ளது. சின்னத்திரையில் எனக்குக் கிடைத்த வரவேற்பு போலவே, பெரிய திரையிலும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்..” என்றார்.
பாடகர் சி.பி.ஶ்ரீனிவாசன் பேசும்போது,
“இப்படத்தில் ஒரு பாட்டியின் குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், அது ஒரு சந்தோஷமான ஆக்ஸிடெண்ட். இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் பாடியுள்ளேன். உங்கள் ஆதரவை எனக்கும் படத்திற்கும் தாருங்கள் நன்றி…” என்றார்.
நடிகை ஆரத்தி பொடி பேசும்போது,
“இது என் முதல் தமிழ்ப் படம். இது ரொம்ப இன்ரஸ்டிங்கான மூவி. கதை கேட்டபோதே எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் படம் பார்க்கும்போது நிறைய ஆச்சரியம் தரும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தந்து, படத்தை வெற்றி பெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி…” என்றார்.
மாஸ்டர் மகேந்திரன் பேசும்போது,
“இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் நிறைய டேலண்ட் உள்ளவர்கள் படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் எனத் தெரிந்து கொண்டேன். அவர்களின் மற்ற திறமைகளை இங்கே பார்த்தபோது, வியப்பாக இருந்தது.
இந்தப் படத்தில் உழைத்திருக்கும் ஒவ்வொருவரையும் பற்றித் தனித்தனியாகச் சொல்ல வேண்டும். தொழில் நுட்ப குழுவில், அத்தனை பேரும் கடினமாக உழைத்துள்ளார்கள். சகோதரர் நரேன் அவர்களுக்கு நன்றி. ஆர்த்தி கேரளாவில் ஒரு வுமன் ஐகான். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்குக் கேரளாவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. மாரி, ஶ்ரீனி இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். இயக்குநர் அருண் கார்த்தி மிகச் சிறந்த நண்பர். படத்தை வித்தியாசமாக, மிக அழகாக உருவாக்கியிருக்கிறார். வரும் ஏப்ரல் 14-ம் தேதி படம் வருகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள்…” என்றார்.