• Sun. May 12th, 2024

திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Byவிஷா

Feb 14, 2024

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், அரோகரா கோஷத்துடன் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் கடற்கரையோரத்தில் 2ம் படை வீடாக அமைந்துள்ள திருத்தலம் திருச்செந்தூர். ஆறு படைவீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. மற்ற 5 அறுபடைவீடுகளும் மலைகளின் மீது தான் அமைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
உற்சவங்களும், திருவிழாக்களும் களைகட்டும். அந்த வகையில் மாசித் திருவிழா மிக முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பெரிய தேரில் சுவாமியும், தெய்வானையும் வலம் வருவதைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளாமான பக்தர்கள் வருகை தருவர். இன்று மாசித் திருவிழாயை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருக்கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. விழாவின் 5ம் நாளான பிப்ரவரி 18 ம் தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும், 20 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைப்பெறுகிறது.
இன்று காலை 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள், பக்தர்களுக்கான பாதுகாப்பு போன்றவைகளை கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *