• Sun. May 5th, 2024

1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

Byவிஷா

Feb 14, 2024

கரோனா காலகட்டத்துக்குப் பிறகு, உலகம் முழுவதும் பெருநிறுவனங்களில் வேலையிழப்பு என்பது தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருப்பது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 9,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 30 விமானங்கள் இயக்கத்தில் உள்ளன. இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதமாகும். இந்த நடவடிக்கையானது செயல்பாட்டு செலவுகளைக் குறைப்பதற்காகவும், நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
“இது செயல்பாட்டு தேவைகளுக்கு மாறாக நிறுவன அளவிலான செலவுகளின் சீரமைப்பை உறுதி செய்வதாகும். பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் பணியாளர்களுக்கு வழங்கும் பணி துவங்கப்பட்டுவிட்டது” என்றார்.
ஸ்பைஸ்ஜெட் பல மாதங்களாக தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை தாமதமாக வழங்கி வருகிறது. பல ஊழியர்களுக்கு இன்னும் ஜனவரி மாத ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ரூ.2, 200 கோடி நிதி திரட்டுவதற்கான செயல்பாட்டில் இருப்பதாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய தயங்குவதாகக் கூறப்படுகிறது.
2019ம் ஆண்டில் ஸ்பைஸ்ஜெட் 118 விமானங்கள், 16 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டிருந்தது. இதன் போட்டியாளரான ‘ஆகாசா ஏர்’, 3,500 ஊழியர்கள், 23 விமானங்களைக் கொண்டுள்ளது. ஆனால், உள்நாட்டு சந்தைப் பங்கில் இரு நிறுவனங்களும் தலா 4 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் பணி நீக்க அறிவிப்பைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்கு இன்று மதிய நிலவரப்படி 4.21 சதவீதம் சரிந்து, ஒரு பங்கு ரூ.65.31 ஆக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *