மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா -பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்துடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி பக்தர்கள் கூட்டம் அலை கடல் போல்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்த கொடை விழா இன்று (மார்ச்_12)ம் தேதி பத்தாம் நாள் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.நேற்று(மார்ச்_11)ம் தேதி 9-ம் திரு விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், உஷ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் இரவு 9:30 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்துடன், அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெண்கள் கையில் அகல் விளக்கு ஏந்திய படி அம்மனை வரவேற்றனர். மேலும் பக்தர்கள் சிவன், பார்வதி வேடம் , சாமி வேடங்கள் அணிந்து நடனமாடி பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்கினார்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் இந்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோயில் பூஜாரிகள் அவர்களுக்கு பிரசாதம் வழங்கி வாழ்த்தினார். அதன்பின் நடைபெற்ற பெரிய சக்கர தீவட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசன மேற்கொண்டனர்.மேலும் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். இந்த திருவிழா காரணமாக இன்று குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.