• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் இனி அன்னப்பிரசாதத்துடன் மசால் வடை

Byவிஷா

Mar 7, 2025

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினந்தோறும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானப் பிரசாதத்துடன் நேற்று முதல் மசால் வடை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் திருமலையில் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 1985ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் ஏழுமலையான் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தினந்தோறும் பசியாறிச் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும் இந்தத் திட்டம் எந்த விதத்திலும், எப்போதும் நிதிச்சுமையின் காரணமாக நின்று விடும் நிலைக்குச் சென்று விடக்கூடாது என்றும் முடிவு செய்து, அதற்காக அப்போதே ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்திய அன்னதானப் பிரசாத அறக்கட்டளையையும் தொடங்கி வைத்தார்.
தற்போது இந்த அறக்கட்டளைக்கு பக்தர்கள் தொடர்ந்து நன்கொடையாக பல கோடி ரூபாய் வழங்கி வருகின்றனர். அதன்படி ரூ.2000 கோடிக்கு மேல் பக்தர்கள் அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு மேல் தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயின் மூலம் பக்தர்களுக்கு சுவையான மற்றும் தரமான அன்னப்பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமல்லமால், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலும் தேவஸ்தானத்தின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளிலும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னப்பிரசாதத்தைச் சாப்பிட்டு வருகின்றனர்.
திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா நித்ய பிரசாத அறக்கட்டளையின் அன்னபிரசாத மையத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்கக் கூடிய உணவு விநியோகம் இரவு 11.00 மணி வரை இரண்டு முறை இடைவேளைக்கு மத்தியில் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த அன்னப்பிரசாத மையத்தில் சாதம், சாம்பார், ரசம், மோர், சர்க்கரைப்பொங்கல், காய்கறி பொறியல், சட்னி உள்ளிட்ட ஏழு வகையான பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் முடிவின்படி கூடுதலாக மசால் வடை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சோதனை அடிப்படையில் கடந்த மாதம் ஒரு நாளைக்கு 5,000 வடைகள் என சில நாட்கள் வழங்கப்பட்டது. அது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், நேற்று முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு மசால் வடை வழங்கும் திட்டத்தை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, செயல் அதிகாரி ஷியாமளாராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சௌத்ரி ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு மசால்வடை பரிமாறி துவங்கி வைத்தனர்.
இதனையடுத்து செயல் அதிகாரி ஷியாமளாராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
தற்போது ஏழு விதமான அன்னப்பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் மசால் வடை வழங்க அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு நாளைக்கு மதிய உணவில் 35ஆயிரம் வடைகள் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது படிப்படியாக வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.