• Mon. Jun 24th, 2024

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்

Byவிஷா

Jun 15, 2024

நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி, பெருமாள்புரத்தை சேர்ந்த உதயதாட்சாயினி (23). எம்.காம் பட்டதாரியான இவரும், பாளையங்கோட்டை நம்பிக்கை நகர் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (28) என்பவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள மதன்குமார் திருநெல்வேலியில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் திராவிட தமிழ் கட்சியில் உறுப்பினராக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர் இவர்களது திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு இருவரும் வெளியேறி, திருநெல்வேலி ரெட்டியார்புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இதற்கிடையே தங்களது மகளை காணவில்லை என உதயதாட்சாயினியின் பெற்றோர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் காதல் ஜோடி, மதன்குமார், உதயதாட்சாயினி ஆகிய இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த உதயதாட்சாயினி குடும்பத்தினர், உறவினர்கள் என 30-க்கும் மேற்பட்டோர், ரெட்டியார்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்து, தங்களது பெண்ணை தங்களுடன் அனுப்புமாறு கூறியுள்ளனர்.
இதற்கு அங்கிருந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, மோதல் ஏற்பட்டது.
இதில் கட்சி அலுவலகத்தில் இருந்த பொருட்கள், கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தனர். அதன்பேரில் அப்பகுதியில் ஒரு சமூகத்தை சேர்ந்த பந்தல் ராஜா, பெண்ணின் பெற்றோர் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள் என தெரியவருகிறது. இந்த சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *