கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் நினைவாக இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், கடற்பசு, டால்பின் மற்றும் திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை புகைப்படங்கள்,கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுகள், ஆவணங்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் 1965 முதல் உள்ள டால்பின் ஆராய்ச்சி மற்றும் மீன்வளத் தொடர்பான அடித்தள ஆய்வுகள், ஆவணப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் மீட்புக்கான நேரடி நடவடிக்கைகள், ஆழ்கடல் அதிசயமாக விளங்கும் டால்பின்களின் அரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், 1981 முதல் உள்ள காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகள், கணக்கெடுப்புகள் மற்றும் தேசிய அங்கீகாரத்திற்கான விரிவான ஆராய்ச்சிகள் குறித்த ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
டால்பின்கள் மிகுந்த புத்திசாலித்தன்மை கொண்ட கடல் பாலூட்டிகளாகும். பெருங்கடல்களில் வாழும் இவை ஒளித்தெரும்பல் முறையை பயன்படுத்தி இரையை கண்டறிகின்றன. சமூகக் குழுக்களாக வாழும் இயல்புடைய டால்பின்கள் மனிதர்களுடன் நட்பாக பழகும் தன்மை கொண்டவை எனவும் கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளது
டால்பின்களின் எடை 150 முதல் 650 கிலோ வரை இருக்கும் என்றும், உலகளவில் 42 வகையான டால்பின்களும், 7 வகையான போர்பாய்ஸ்களும் உள்ளன என்றும், அவற்றின் ஆயுட்காலம் 20 முதல் 80 ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படக் கண்காட்சி கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு, அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அறிவியல் ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






