• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கார்சிலையிடம் மனு -பாஜக, விசிக கட்சியினர் கடும் வாக்குவாதம்

ByKalamegam Viswanathan

Mar 14, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்தனர். பாஜக கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு செல்ல முடியாதவாறு, அம்பேத்கர் சிலைக்கு முன்பாக அமர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை, தமிழக அரசு பட்டியலின மக்களுக்கு செலவிடாமல், அந்த நிதியை வேறு பல திட்டங்களுக்கு செலவிடுவதாக பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு தீர்வு கேட்டு, சிவகாசியில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்தனர். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோரிக்கை மனு கொடுப்பதாகக்கூறி அம்பேத்கர் சிலையை அவமதிக்கும் முயற்சியில் பாஜக கட்சி ஈடுபடுவதாகக்கூறி, விசிக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலை, சிவகாசியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக கட்சியினர் ஊர்வலமாக வந்து, அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது, பாஜக கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு செல்ல முடியாத வகையில், சிலைக்கு முன்பாக அமர்ந்து பாஜக கட்சியினரை கண்டித்து, விசிக கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் கலைந்து போகச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நூதன மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பாஜக கட்சியினர் வந்ததால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பதற்றமான சூழல் ஏற்பட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் என இருதரப்பைச் சேர்ந்தவர்களிடமும், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று, தங்கள் கட்சி அலுவலகம் முன்பு, தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பதற்றமான சூழல் இருந்து வருவதால், அம்பேத்கர் சிலைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என இரண்டு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், சிவகாசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.