புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்து விட்டது. இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா, இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். பிரதமர் மோடி கொரோனா நிலைமை பற்றி நேற்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.