காவிரியில் 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் நான்கு மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தண்ணீர் தேவைகள் பற்றி கேட்டபோது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பிப்ரவரி 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதிவரை மாதந்தோறும் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் கர்நாடகம் உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அதிகாரிகள் ஆணையத்தை வலியுறுத்தினர்
ஆனால் கர்நாடக அரசின் உறுப்பினரோ, ஏற்கனவே குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக பிலிகுண்டுலுவில் தண்ணீர் வழங்கப்பட்டு விட்டது. அதனை வருகிற மாதங்களுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதனை தமிழக அதிகாரிகள் கடுமையாக எதிர்த்தனர். அத்துடன் உபரி நீரானது குறுகிய காலத்துக்குள் வழங்கப்பட்டு விட்டது. எனவே அதைக் கணக்கில் எடுக்கக்கூடாது. கர்நாடக அரசின் வாதத்தை ஏற்கக்கூடாது என்று வற்புறுத்தினர்.
உச்ச நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறதோ, அதற்கேற்ப மாதவாரியான அட்டவணைப்படி அந்தந்த மாதத்தில் உரிய தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையத்தின் தலைவர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 10 டிஎம்சி தண்ணீர் காவிரியில் நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.