• Sun. May 5th, 2024

மாலத்தீவு அமைச்சர்கள் பதவி நீக்கம்..!

Byவிஷா

Jan 8, 2024

மாலத்தீவில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதற்காக, 3 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றார். அந்த பயணத்தின் போது பிரதமர் ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் நடைபயணம் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில்” இயற்கை அழகுடன் லட்சத்தீவின் அமைதி மனம் மயங்க செய்கிறது. லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” என பதிவிட்டார்.
பிரதமர் மோடியின் இந்த பதிவிற்கு எதிராக சமூக ஊடகத்தில் மாலத்தீவு அமைச்சர்களாக உள்ள மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஜ்ஜூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு 3 அமைச்சர்கள் பதிவிட்டதற்கு இந்தியர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தச் சர்ச்சையால் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். அதேபோல மாலத்தீவுக்குச் செல்ல புக் செய்யப்பட்ட விமான டிக்கெட்களும் ரத்து செய்து வருகின்றனர். இதற்கிடையில் டீழலஉழவவஆயடனiஎநள என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையில் மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஜ்ஜூம் மஜித் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
பிரதமர் மோடி குறித்து அவர்கள் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, இது அரசின் பார்வையல்ல என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. கடந்த நவம்பரில் மாலத்தீவின் புதிய பிரதமராக முகமது மூயிஸ் பதவியேற்ற பிறகு இந்தியா – மாலத்தீவு உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *