கேரள மக்களின் மன்னர் பாசமும், மரியாதையும் இன்று வரை தொடர்ந்து வருகிறது என்பதற்கு சாட்சியாக விளங்குவதுதான் மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடப்படும் திருவிழாதான் ஓணம் பண்டிகை திருவிழா.
மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாரியாரின் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார்.
திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துக்குள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.
மகாபலி மன்னர் ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை காண வருவதாகவும், மன்னரை வரவேற்க குடி மக்கள் தங்கள் வீட்டு வாசலில் பத்து நாட்களுக்கு பல்வேறு வண்ண பூக்களால் வித விதமாக பூக்கோலம், பூக்களம் அமைப்பது என இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாமல், உலகமெங்கும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகையைப் பற்றி அன்று தொட்டு இன்றுவரை தொடரும் ஒரு பழமொழி. காணம் விற்றெங்கிலும் ஓணம் ஆகோசிக்கா (காணம் விற்றாவது ஓணம் கொண்டாடவேண்டும்)
கேரள மக்களின் தேசிய விழாவில் பூக்களுக்கு அடுத்து முக்கியத்துவம் ஓண ஊஞ்சல், ஆண்களின் வீர விளையாட்டு ஓணக்களி என்னும் சுண்டன் வள்ளம் போட்டி. மிக நீளம் வடிவ படகு ஒன்றில் 50-க்கும் குறையாத நபர்கள் துடுப்பு போட்டு நீண்ட காயலில் படகு ஓட்டும் போட்டி இளைஞர்கள் இடையே நடக்கும் வீர விளையாட்டு. கேரள மக்களின் தேசிய விழா குமரி மாவட்டத்திலும் ஒரு முக்கிய நிகழ்வாக 1956 நவம்பர் 1-ம் தேதி வரையில் நடைபெற்றது.
கேரளாவில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் போது, கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான “ஓண சாத்யா” என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கிறார்கள்.
பத்தாம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். குமரியில் ஓண விழாவின் கொண்டாட்டமாக. குமரியில் உள்ள அனைத்து மகளிர் கல்லூரிகளில் அத்தப் பூ கோல போட்டிகள் நடத்தி பரிசு கொடுப்பது எல்லாம் மறைந்து போய் இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன என்ற நிலையில். குமரி ஆட்சியர் அலுவலகம் பெண் பணியாளர்கள் அலுவலகத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் விழா ஒரு அடையாளமாக கொண்டாடப்பட்டது.