• Fri. Apr 26th, 2024

கேள்வி எந்த மொழியிலே கேட்கிறாங்களோ அதே மொழியில் பதில் சொல்லணும்- சு.வெங்கடேசன் எம்.பி தொடர்ந்த வழக்கில் நெத்தியடி பதில்!..

By

Aug 19, 2021

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்திருந்த வழக்கில், ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களின் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியாவில் பதில் அளிக்கும் சட்ட விரோதமான நடைமுறை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மிக முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.

மத்திய ரிசர்வ் படையிலுள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தலா 1 இடமும் இருந்தன. தமிழ்நாட்டில் ஒறு மையம் கூட அந்த பட்டியலில் இல்லை. இது குறித்து உள்துறை இணை அமைச்சகத்திற்கும், சி.ஆர்.பி.எப் பொது இயக்குநருக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இந்தியில் பதில் கடிதம் எழுதியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத மாநிலங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என 1963 அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 தெளிவாகக் கூறுகிறது. இன்று வரை தமிழ்நாடு அரசு இந்தியை அலுவல் மொழியாக ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளது. இதற்கான சட்டமும் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசுடனான இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்ந்தும் வருகிறது. இருந்தாலும்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிகளின் கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளிக்கும் முறை தொடர்ந்து நடைபெறுகிறது.. இது அரசியல் சாசனம் 19 (1) (அ) வழங்கியுள்ள உரிமைகளுக்கும், 1963 அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்பதை வலியுறுத்தி என்று அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசும், அதன் அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. செய்தியாக இருந்தாலும் சரி, விளக்கமாக இருந்தாலும் சரி, அதனைத் தாய்மொழியில் தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *