• Sat. May 11th, 2024

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம்…என்ஐடி வல்லுநர் குழு அறிக்கை…

Byகாயத்ரி

Dec 11, 2021

மதுரை புது நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி என்.ஐ.டி குழு, நெடுஞ்சாலைத்துறையினர் விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதாக விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக இதுவரை 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த விபத்து குறித்து ஆட்சியரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை புது நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலையின் சார்பாக சுமார் 545 கோடி ரூபாய் மதிப்பில் 7.5 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பணிகள் நிறைவடைய வேண்டிய நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்த பாலத்தின் சர்வீஸ் பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உத்திரப்பிரதேசத்தில் சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்தார். ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பாலம் இடித்து கீழே விழுந்ததால் இந்த தொழிலாளி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தன.


இந்த விபத்து நடந்த உடனேயே உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடியாக வந்து இந்த பகுதியை ஆய்வு செய்தார். திருச்சி என்.ஐ.டி வல்லுநர் குழு மூலம் இந்த விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் விரிவான அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *