• Wed. May 8th, 2024

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

ByN.Ravi

Apr 27, 2024

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுகளை, திருவிழாவின் மினியேச்சர் போல தத்ரூபமாக செய்து அசத்தியுள்ளனர் மாணவர்கள்.
மதுரை கோவில் பாப்பாகுடி மகரிஷி பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து முழு சித்திரைத் திருவிழாவையும் மீட்டுருவாக்கம் செய்தனர். மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய அங்கமாக இருக்கின்றன. இந்த நிகழ்வுகளை மாணவர்கள் தத்ரூபமாகச் செய்து காட்டினர்.

இதற்காக தங்க குதிரை போல தயார் செய்யப்பட்ட வாகனத்தில், கள்ளழகர் வேடமணிந்த மாணவர் ஒருவர் அமர்ந்து கொண்டார். அவரோடு, கோயில் பட்டாச்சாரியார் வேடம் அடைந்த மாணவரும் ஏறிக்கொண்டார். எதிர் சேவையை நினைவுபடுத்தும் விதமாக, சீர்பாத தூக்கிகள் போல தலையில் பாகை கட்டிய 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி வளாகத்திற்கு வெளியே கள்ளழகரை ஊர்வலமாக அழைத்துச் சென்று வந்தனர். கள்ளழகருக்கு முன்பாக கருப்பசாமி வேடமிட்ட மாணவர்கள் அறிவாள் ஏந்தி ஆடியபடி சென்றனர். மேலும் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் ஊழியர்கள் காய்கறி, தேங்காய், பூ, பழம் மற்றும் மாலை தட்டுகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். நாம சின்னம் போட்ட மயிலிறகு விசிறிகளையும் எடுத்து வந்து கூட்டத்தின் நடுவே விசிறி விட்டனர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக, விளையாட்டு மைதானத்தின் நடுவில் செயற்கைக் குளமும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கள்ளழகர் இறங்க மாணவர்கள் தங்களிடமிருந்த தண்ணீர் துப்பாக்கியால் தண்ணீர் பீச்சி அடித்து கொண்டாடினர். இதனை பார்ப்பதற்கு சித்திரை திருவிழா மறுபடியும் நடப்பது போன்று இருந்தது. முன்னதாக, மீனாட்சிமற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

திருவிழாவில் பள்ளி மாணவர்களால், சிறு கடைகள் வைக்கப்பட்டு அதனால் கிடைத்த பணம் பெற்றோர் அற்ற குழந்தைகள் மற்றும் காப்பகத்தில் இருக்கும் முதியவர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளித் தலைவர் வடிவேலு, முதல்வர் ஹேமா கண்ணன் தலைமையில் கலை மற்றும் கலாச்சார துறை ஆசிரியர்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *