• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரண்மனை போல் ஜொலிக்கும் மதுரை அதிமுக மாநாடு..!

Byவிஷா

Aug 19, 2023

மதுரையில் நாளை நடைபெறவிருக்கும் அதிமுக மாநாடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரண்மனை போல் மின்விளக்குகளால் ஜொலிப்பதால், பொதுமக்கள் செல்ஃபி எடுக்க குவிந்து வருகின்றனர்.
நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக அரண்மனை போன்ற பிரமாண்ட நுழைவு வாயிழுடன் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையில் ஜொலிக்கும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநாட்டுத் திடலை காணவும், செல்ஃபி எடுக்கவும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

அதற்கான முன்னேற்பாடு பணிகள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மலைபோல் செட், அரண்மனை போன்ற பிரம்மாண்ட நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நுழைவாயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் அடங்கிய கட்டவுட் வைக்கப்பட்டு, மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான விழா மேடை சுமார் 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கான்கிரீட் தளம் கொண்டு 200-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வகையில் எல்இடி திரைகளுடன் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வருகை தரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தகரக் கொட்டைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகமானோர் வரக்கூடும் என்பதால் மேடையின் இரு புறமும் கூடுதலாக 50,000 நாற்காலிகள் அமைக்கப்பட்டு, நான்கு மிகப்பெரிய எல்இடி திரையரங்குகளும், 12க்கும் மேற்பட்ட சிறிய எல்இடி திரையரங்குகளும் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக வரலாற்று கண்காட்சி மற்றும் சமையல் கூடாரம், உணவருந்தும் பந்தல்கள் உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அனைத்து இடங்களிலும் மின்விளக்குகளால் தற்போது மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் விழா கோலம் பூண்டு காணப்படுகிறது. பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் வகையில் உள்ள மின் விளக்கு அலங்காரத்தை பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.