• Mon. May 6th, 2024

50வது நாளில் ‘மாநாடு’ வெற்றி பயணம்!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இந்த தகவலை மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

வெளியாவதில் பிரச்சினை
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரிலீசுக்கு முன்பு படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவழியாக நவம்பர் 25ந்தேதி காலை தாமதமாக வெளியானது.

50வது நாள்
தமிழில் முதன் முறையாக டைம் லூப் முறையில் எடுக்கப்பட்ட இப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினார்கள். இந்நிலையில் மாநாடு திரைப்படம் 50வது நாளை கடந்துள்ளது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் நன்றி கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முடிவு சிறப்பானது
அந்த அறிக்கையில், தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும் என மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும் அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது. நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது.

இன்றும் திரையரங்கில்
50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணையானது. இடையில் புதுப்படங்கள் வந்து போனாலும் மாநாடு தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டான். வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல. வெற்றி தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் என்பதாக இந்த வெற்றி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது.

அனைவருக்கும் நன்றி
இதற்கு காரணமான நாயகன் சிலம்பரசன் இயக்குநர் வெங்கட் பிரபு, ஃபைனான்சியர் திரு. உத்தம் சந்த் அவர்களுக்கும், அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், வாங்கிய விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் உடன் நின்று படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *