
புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லேவில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையத்துடன் பாண்லே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்
ஐஸ்கிரீம் உற்பத்தியினை விரிவு படுத்தும் வகையில் ,நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் ரூ.34 கோடியில் நிறுவப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல் அமைச்சர் ரங்கசாமி பூமிபூஜை செய்து, கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி..

புதுச்சேரியில் ஒரு நாளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஆனால் 60ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பற்றாக்குறை பாலை கர்நாடகா, தமிழ்நாடு பகுதிகளில் இருந்து பெறுகிறோம். ஆனால் இன்று விவசாய நிலங்கள் குறைந்து விட்டது. தொழில் பெருக்கம், நகர விரிவாக்கத்தால் தற்போது 10 ஆயிரம் எக்டேருக்குள் விவசாயம் சுருங்கிவிட்டது.
படித்த இளைஞர்கள் வேலையில்லை, சும்மா இருக்கிறோம் என சொல்ல கூடாது. அவர்கள் கறவை மாடுகள் வளர்த்து மினி பால்பண்ணை வைக்க வேண்டும் என்றும் கிராமப்பகுதி மட்டுமின்றி நகர பகுதியில் படித்த இளைஞர்களும் குறைந்த அளவில் மாடுகளை வளர்த்து வருமானத்தை ஈட்டலாம் இதனால் புதுச்சேரியின் பால் உற்பத்தியையும் பெருக்க முடியும் என்றார்.
பாண்லேவில் பாதி பேர்தான் வேலை பார்க்கின்றனர், மீதி பேர் எங்கே உள்ளனர் என தெரியவில்லை என்கின்றனர்.. நஷ்டத்தில் விழுந்த நிறுவனங்களை மீண்டும் லாபத்துக்கு கொண்டுவருவது கஷ்டமான காரியம். தற்போது பாண்லே ரூ.27 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. இன்னும் சில நாட்கள் கழித்தால் ரூ.30 கோடி நஷ்டம் என சொல்வார்கள். நான் சொல்வது கசப்பான உண்மை. இரவு பணிக்கு ஊழியர்கள் வருவதில்லை என்கின்றனர். இரவு பணியும் செய்தால்தான் பாண்லேவை லாபத்தில் இயக்க முடியும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு இதுவரை 4 ஆண்டில் 4 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்பியுள்ளோம். கடந்தகால ஆட்சியில் 5 ஆண்டில் ஒரு பணியிடம்கூட நிரப்பப்படவில்லை. இன்னும் 4 மாதத்தில் ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளோம். என்று குறிப்பிட்டார்.

