நற்றிணைப் பாடல் 74:
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,
”ஏதிலாளனும்” என்ப் போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
கண்டல் வேலிய ஊர், ”அவன்
பெண்டு” என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!
பாடியவர்: உலோச்சனார்
திணை: நெய்தல்
பொருள்:
யானைமீது பாகன் செல்வது போலப் பரதவர் அம்பியில் செல்வர். கடலில் வலையை வீசி மீன் பிடிப்பதற்காகச் செல்வர். அம்பி நிறைய வலையை ஏற்றிக்கொண்டு செல்வர். வடித்தெடுத்த நாரால் கதிர் விட்டுத் திரித்த வலிமையான ஞாண்-கயிற்றால் பின்னிய பெரிய வலை அது. பரதவர் ஊரில் சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்கள் இருக்கும். இப்படிப்பட்ட ஊர்களைக் கொண்ட சேர்ப்பனே! என் தலைவிக்கு உறவினனான நீ உறவில்லாத ‘ஏதிலாளன்’ போல் ஆகிவிட்டாய். கொண்டல் என்னும் கீழைக்காற்று அடிக்கும்போது புதுமணல் பொங்கிக் கிடக்கும் கானலில் பூத்திருக்கும் புன்னைமலர் மணக்கும். குருகின் வெண்சிறகு மொசியும்படி (கூம்பும்படி) அந்தக் குளிர் காற்று வீசும். இப்படிப்பட்ட காலத்தில், வேலிநிலத்தில் கண்டல் பூக்கள் பூத்துக்கிடக்கும் ஊரில் வாழும் பெண் (பெண்டு) உன்னுடையவளாக இருக்கிறாள் என அறிகிறேன். இந்தக் கறையை நீக்க முடியுமா?