• Sat. Apr 27th, 2024

இலக்கியம்

Byவிஷா

Dec 12, 2022

நற்றிணைப் பாடல் 73:

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே செவ் அரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
நுதற் கவின் அழிக்கும் பசலையும்,
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.

பாடியவர்: மூலங்கீரனார் பாடல்
திணை: பாலை

பொருள்:
முருக்கம்பூக் கொத்தைப் போல அழகற்ற விரல்களைக் கொண்ட பேய்
வலிமையான வாயைக் கொண்ட பேய்
மாலையில் வரும் பேய்
மன்றத்துக்குள் புகும் பேய்
வளம் மிக்க பழமையான ஊரில் மாலைக்காலத்தில் படையலாக உதிர்த்த பூக்களை உண்ணுவதற்காக நுழையும் பேய்
இந்தப் பேய் வரும் மாலைக்காலத்தில் அவருடன் சேர்ந்திருக்கும்போதே நான் அஞ்சும் பேய் வரும் காலத்தில் நான் இங்கே தனியே இருக்கும்படி விட்டுவிட்டுச் செல்வதாகச் சொல்கிறார்.

நெல் வயலில் அன்னம் உறங்கும் பூந்தோட்டம் கொண்ட சாய்க்காடு என்னும் ஊரைப் போன்ற என் நெற்றியின் அழகை அழிக்கும் பசலையையும், அயலோர் காதல் உறவைப் பழிதூற்றும் அம்பலையும் தந்துவிட்டுச் செல்கிறார். பேய்க்கு அஞ்சும் எனக்கு பசலையும் அம்பலும் துணை ஆகுமா? – தலைவி இப்படித் தோழியிடம் கூறி நொந்துகொள்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *